டெல்லி: தலைநகர் டெல்லியில் 4க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப் சந்த் பந்து மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்றும் (மே.13) டெல்லியில் உள்ள புராரி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இன்றும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான சம்பவத்தில் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து இரண்டு நாட்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
முன்னதாக கடந்த 2ஆம் தேதி டெல்லியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள 3 பள்ளிகளுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்! கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம்! - Lok Sabha Election 2024