தானே (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், டோம்பிவிலி பகுதியில் உள்ள மாகாராஷ்டிர மாநில தொழிற்பேட்டையில் (MIDC) இயங்கும் ஆம்பர் ரசாயன தொழிற்சாலையில் (Amber Chemical Company) உள்ள கொதிகலன் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 48க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து விபத்தை நேரில் கண்ட நபர் கூறுகையில், "ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் சத்தம் பல கிலோமீட்டர்கள் கடந்து கேட்டது. இதன் தாக்கத்தால் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஜன்னல்கள் உடைந்தன. மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "டோம்பிவிலி விபத்தில் 6 பேர் உயிரிழந்து, 48 பேர் படுகாயம் அடைந்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயம் அடைந்தவர்கள் எய்ம்ஸ், நெப்டியூன் போன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். மேலும், விபத்து நடைபெற்ற பகுதியில் பல்வேறு குழுக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த விபத்து குறித்து தானே மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் யாசின் தத்வி கூறுகையில், "மதியம் சுமார் 1.40 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீயானது, அதன் அருகே இருந்த கட்டடங்களுக்கு பரவியது. மேலும், புகையால் ஏற்பட்ட அடர்ந்த புகை தொலைவில் இருந்து கூட தென்பட்டது.
மேலும், மீட்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்து, 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. அது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. ஆனால், இது குறித்த அறிக்கை எதுவும் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், அதில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடந்த விபத்து மத்ரே பாடா, ரீஜென்சி எஸ்டேட், சோனார் பாடா போன்ற குடியிருப்பு பகுதிகளில் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது அப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் இருக்கும் இத்தகைய ஆபத்தான தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றி அமைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: யானையை விரட்டச் சென்ற பல்கலை காவலாளியை துரத்திய யானை.. கீழே விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்!