கொழும்பு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 1991 ஜூலை 22ஆம் தேதி கைது செய்யப்பட்ட சுதேந்திரராஜா என்ற சாந்தன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2022 நவம்பர் 11ஆம் தேதி பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
32 ஆண்டுகள் வரை சிறைவாசத்தில் இருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார், சாந்தன். இந்நிலையில், அவர் கல்லீரல் வீக்கம், கால் வலி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பிப்.28ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், சாந்தனின் உடல் இலங்கையில் உள்ள வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது உடல் சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில். அங்கு பல்வேறு கட்ட அனுமதிக்கு பிறகு வவுனியா, மாங்குளம் மற்றும் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு சாந்தன் உடல் வைக்கப்பட்டது.
சாந்தன் உயிரோடு இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நேற்று பிற்பகல் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உற்றார் உறவினர், நண்பர்கள், போராளிகள் எனப் ஏராளமான கண்ணீருடன் சிந்தியபடி, விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது