மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (டிச.11) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். அடுத்த மூன்று ஆண்டுகாலம் இவர் இந்த பதவியில் இருப்பார்.
டிசம்பர் 2018 முதல் ஆறு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து வந்த சக்திகாந்த தாஸ் கரோனா காலம் போன்ற நெருக்கடியான சூழலில் இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி இருந்தார்.
இந்நிலையில், அவரது பதவிக்காலம் டிசம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா ஐஏஎஸ் அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து இன்று அவர் அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். சஞ்சய் மல்ஹோத்ரா அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக பணவியல் கொள்கை, நிதி ஒழுங்குமுறை மற்றும் நாட்டில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கியமான செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார்.
இதையும் படிங்க: '3 கோடி ரூபாய் கொடு, இல்லையெனில் செத்து விடு' - பெங்களூரு சுபாஷ் தற்கொலையின் பின்னணி..!
சஞ்சய் மல்ஹோத்ரா பொருளாதார மற்றும் நிதி விஷயங்களில் விரிவான அனுபவம் கொண்ட ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தான் கேடரில் 1990 பேட்ச் ஐஏஎஸ் முடித்தவர். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக, சஞ்சய் மல்ஹோத்ரா பணவீக்க இலக்குகளை பராமரித்தல், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி மற்றும் வரி விதிப்பில் நீண்ட அனுபவம் கொண்ட மல்ஹோத்ரா, ரிசர்வ் வங்கி ஆளுநர் பணியில் ஒரு பகுதியாக, நேரடி மற்றும் மறைமுக வரிகள் தொடர்பான வரிக் கொள்கை வகுப்பதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இலக்கின்படி, வளர்ச்சிக்கும் பணவீக்கத்துக்கும் இடையே சமநிலையை மீட்டெடுப்பது ஆளுநரின் மிக முக்கியமான பணியாகும்.