மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை எனில் ரூ.5 கோடி தர வேண்டும். இரண்டில் ஒன்றை செய்யாவிட்டால் அவரை கொன்று விடுவோம் என மும்பை போக்குவரத்து போலீசாருக்கு மர்ம நபர் மீண்டும் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த 12ஆம் தேதி மும்பையில் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கூலிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில், பாபா சித்திக்கின் நண்பரான சல்மான் கானை கொன்று விடுவதாக மும்பை போலீசாருக்கு கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வாட்ஸ் ஆப் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததாக நொய்டாவின் 39 செக்டார் பகுதியைச் சேர்ந்த முகம்மது டயாப் என்ற 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், எந்தவொரு கும்பலும் இந்த மிரட்டல் விடுத்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என முகம்மது டயாப் கூறியதாக மும்பை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதற்கான காரணம் என்ன, எதற்காக சல்மான் கான் மற்றும் அரசியல் பிரமுகரை மட்டும் குறி வைத்து மிரட்டல் விடுத்தனர் என்ற கோணங்களில் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், "மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் சல்மான்கான் ரூ.5 கோடி தராவிட்டால், அவரை கொன்று விடுவதாக கூறினார். கூலி படையை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறிக்கொண்ட அந்த நபர், சல்மான் கான் உயிரோடு இருக்க வேண்டும் எனில் எங்களுடைய சமூகத்தின் (பிஷ்னோய்) கோவிலுக்கு சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையெனில் ரூ.5 கோடி தர வேண்டும் என்று கூறினார்,"என தெரிவித்தார்.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் சல்மான் கானுக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த மிரட்டலுக்கும் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்