ரேபரேலி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் ராகுல் காந்தி, ஜூலை 1ஆம் தேதி அனைத்து ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கிலும், 8 ஆயிரத்து 500 ரூபாய் பணம் போடப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் மகளிர் வங்கிக் கணக்கில் 8 ஆயிரத்து 500 ரூபாய் பணம் வரவு வைக்கப்படும் என்றார். மேலும் இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்றார். முன்னதாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அனைத்து ஏழை பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலில் இந்த முறை அமேதி தொகுதியை விட்டுவிட்டு ரேபரேலியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பேசிய ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் முன்பு தனது தாய் சோனியா காந்தியும் அவருக்கு முன் தனது பாட்டி இந்திரா காந்தியும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியதாகவும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தற்போது தான் போட்டியிடுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மட்டுமின்றி கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "ஜூலை 1, 2024 அன்று, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் காலையில் தங்கள் கணக்குகளைச் சரிபார்க்கும் போது, அவர்களிடம் ரூ.8500 ஏற்கனவே டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்.
மேலும், இந்தியா கூட்டணி அரசாங்கத்தில், இது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நடக்கும். இது உங்களின் ஒரு வாக்கும் எங்கள் பக்கம் இருப்பதால் நிலைமை மாறும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆள்கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! - HD Revanna Got Bail