பாட்னா : 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவது 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்நிலையில், பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 24 வாக்குறுதிகள் கொண்ட பரிவர்தன் பத்ரா என்ற தேர்தல் அறிக்கையை ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார்.
அதில் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் நாடு முழுவதும் உள்ள 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் எரிவாயு விலை 500 ரூபாயாக குறைக்கப்படும், 200 யூனிட் இலவச மின்சாரம், பீகார் மாநிலத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்,
பூரினியா, பாகெல்பூர், முஸாபர்பூர், கோபால்கஞ்ச், ரக்ஸ்சால் உள்ளிட்ட இடங்களில் விமான நிலையம் கட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் ஆர்ஜேடி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய தேஜஸ்வி யாதவ், "இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளோம்.
2024 ஆம் ஆண்டுக்கான 24 வாக்குறுதிகள் அடங்கிய பரிவர்தன் பத்ரா என்ற அறிக்கையை வெளியிட்டு உள்ளோம். வாக்குறுதிகள் அனைத்தும் பொறுப்புடன் நிறைவேற்றப்படும். பீகார் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பாஜக தெரிவித்து இருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக சுதந்திரம் கொண்டு வரப்படும். ஏறத்தாழ 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர், முகாலய எண்ண ஓட்டங்களை கொண்டு இருப்பதாகவும், ஷரவன மாதங்களில் கறி சமைப்பதும், நவராத்திர நேரத்தில் மீன் சாப்பிட்டும் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
இது குறித்து பேசிய தேஜஸ்வி யாதவ், பீகாரில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சிறப்பு அந்தஸ்து போன்ற முக்கிய பிரச்சினைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்துமாறு தெரிவித்து இருந்தார். 40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? - Rameshwaram Cafe Blast 2 Arrest