டெல்லி: 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கடந்த இரு நாட்களாகப் பதவியேற்றனர். ஜூன் 25-ஆம் தேதியன்று பதவியேற்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்துகொண்டு பதவியேற்றார். பின்னர், மரபுபடி சபாநாயகருக்குக் கைகுலுக்க மறந்து ராகுல் காந்தி தனது இருக்கைக்குச் செல்ல முற்பட்டார்.
பின்னர், கீழே இருந்த சக எம்பிக்கள் கூறிய பிறகு சுதாரித்துகொண்ட ராகுல் மீண்டும் சென்று சபாநாயகருக்கு கைகுலுக்கி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டனர். அதன் பின்னர் யாரும் எதிர்ப்பாராத வகையில் சபாநாயகருக்கு அருகில் நின்றிருந்த மெய்க்காவலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராகுல் காந்தி அவருக்கு கைக்குலுக்கி நன்றி தெரிவித்தார்.
மக்களவையில் எம்பியாக பதவியேற்ற பலரும், தங்களது கட்சித் தலைவர்களுக்கோ, சுதந்திரப் போராட்ட தலைவர்களுக்கோ, அல்லது மதங்களுக்கோ புகழாராம் சூட்டும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். ராகுல் காந்தி எளிய, எளிய மக்களுடன் இணைந்து செயல்படுகிறார். என அக்கட்சியினர் புகழாராம் சூட்டி வருவதை மெய்ப்பிக்கும் வகையிலிருந்தது மக்களவையில் அவர் செய்த செயல் உள்ளதாக மெய்க்காவலருக்கு கைக்குலுக்கியதை செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதோடு விட்டாரா ராகுல், சபாநாயகருக்கு பின்னால் கேமராவின் கண்களுக்குத் தெரியாமல் நின்றிருந்த நபருக்கும் தனது வணக்கத்தை வைத்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரின் இந்த செயல் இணையத்தில் வைரலான நிலையில் மக்கள் பலர், ராகுல் காந்தியைப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக "இது எல்லோருக்குமான 'கை' என்பதை நிரூபித்துள்ளதாக ராகுல் காந்திக்குப் பாராட்டு கூறி வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட போது பலரும் அவரை கிண்டல், கேலிகள் செய்து வந்த நிலையில் தற்போது அவர் அரசியல் மற்றும் மக்கள் செயல்பாடுகளில் அறிவு முதிர்ச்சியுடன் செயல்பாடுவதாகவும் கூறி வருகின்றனர். கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மீது இருந்த மக்கள் நம்பிக்கை இந்த தேர்தலில் பல மடங்கு அதிகரித்துள்ளது அக்கட்சிக்கு இருமடங்காக எம்பிக்கள் உயர்ந்துள்ளதே சான்று.
மக்கள் பிரதிநிதிகளை வழிநடத்தும் தலைவனாக, எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி அமர்ந்திருப்பது, மக்களின் குரலை மக்களவையில் சிறப்பாக ஒலிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் எழுந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இன்றி, தமிழகத்தைப் பொருத்த வரை திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவு ராகுல்காந்திக்கு இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "நமது நாட்டு மக்களுக்குச் சேவை செய்ய உங்களை வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பொறுப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், இந்த பொறுப்பை ஏற்றுள்ள ராகுல்காந்திக்கு வாழ்த்துகள் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.