புது டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, '' நீட் விவகாரம் இன்றைய நாளின் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இது, நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றியது. எனவே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முன் நீட் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டும்'' என்றார்.
முன்னதாக ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் நீட் குறித்து பேசினார். அப்போது அவர், '' தற்போதைய சூழலில் எந்த விவகாரத்துக்கும் முன்பாக நீட்டை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். அத்துடன், இதுகுறித்து இளைஞர்கள் கவலைப்படுவதாகவும், என்ன நடக்கப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை எனவும் கூறினார்.
மேலும், நீட் தேர்வு குறித்து மாணவர்களின் கவலைகளை தீர்க்க இந்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இருக்கின்றன என்ற செய்தியும் உத்தரவாதமும் நாடாளுமன்றத்திலிருந்து இளைஞர்களுக்குச் செல்ல வேண்டும்," என்று ராகுல்காந்தி கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "நீட் தேர்வு விவகாரத்தை இந்தியா கூட்டணி மிக முக்கியமானதாக கருதுகிறது. மேலும், இது இளைஞர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறி, அவர்களை விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. இதில், சுமார் 24 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பின்னர், ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக, யுஜிசி-நெட் மற்றும் நீட் முதுகலை தேர்வுகளை ஒன்றிய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் விவகாரம்; எதிர்கட்சிகள் அமளி.. இரு அவைகளும் ஒத்திவைப்பு!