டெல்லி: தமிழகத்தில் 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அதானி நிறுவனம் தரம் குறைந்த நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து வாங்கி மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்று 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக வெளியாகியுள்ள செய்திக்கு கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ''நிலக்கரி ஊழல் குறித்து ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அமையும் அரசு விசாரணை நடத்தும்'' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ''பாஜக ஆட்சியில் நடந்த மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த ஊழல் மூலம் மோடியின் அன்பு நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார்.
''இந்த வெளிப்படையான ஊழலில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு இந்திய அரசு இந்த மெகா ஊழலை விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும்'' என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த பதிவு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிலர் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், சிலர் அவரை விமர்சித்தும் கமெண்டிட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த மே 8ஆம் தேதி தெலங்கானாவின் கரீம்நகரில் பாஜக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அந்த பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ''மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியைக் குறிப்பிடுவதை ராகுல் காந்தி திடீரென்று நிறுத்திவிட்டார். இந்த தொழிலதிபர்களிடம் இருந்து பழைய பெரிய கட்சி டெம்போ நிறைய பணம் வாங்கியுள்ளது'' என்றும் விமர்சித்திருந்தார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி ''தொழிலதிபர்கள் தொழிலதிபர்கள்'' என்று சுட்டிக்காட்டி வந்ததாகவும், பின்னர் மெதுவாக அம்பானி-அதானி, அம்பானி-அதான, என்று சொல்லத் தொடங்கி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் அம்பானி-அதானியை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்'' என்றும் மோடி விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், தற்போது நிலக்கரி விவகாரத்தில் மோடியை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, ''இந்த வெளிப்படையான ஊழலில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா?'' என கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதை குழியில் தள்ளும் சைபர் க்ரைம் மோசடிகள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?