புதுடெல்லி: கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) தொழில் துறையினரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சனைகளை கோவையின் பிரபல தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் சுட்டிக்காட்டி பேசினார்.
அப்போது அவர், ''பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை ஆனால் பன்னுக்குள் வைக்கும் ஜாமுக்கு 18% ஜிஎஸ்டியா?'' என பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரை அன்னபூர்ணா சீனிவாசன் நேரில் சந்தித்தார். அப்போது " நீங்க வயதில் பெரியவங்க, தயவுசெய்து மன்னித்து விடுங்கள்" என இருக்கையிலிருந்து எழுத்து நின்று இரு கைகளையும் கூப்பி நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரினார்.
இதையும் படிங்க: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வருவது எப்போது?
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதங்களை கிளப்பியது. மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டாரா? மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உணவக உரிமையாளரை அச்சுறுத்தியதாக சந்தேகம் எழுகிறது என கூறினார்.
இந்த சூழலில், இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், ''கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், அரசு அதிகாரிகளிடம் ஜிஎஸ்டி முறையை குறித்து கேள்வி கேட்கும்போது அவமதிக்கப்பட்டுள்ளார். அவரது கோரிக்கை ஆணவத்துடன் அணுகப்பட்டுள்ளது. ஆனால், தனது கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துக்களை பெற முற்பட்டால் மோடி சிவப்பு கம்பளம் விரிக்கிறார். அதிகாரத்தில் இருப்போரின் ஈகோ புண்படுத்தப்பட்டால் அவர்கள் அவமதிப்பார்கள் என்பது தெரிகிறது'' என இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்