சுல்தான்பூர்: கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஜூலை.26) சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ராகுல் காந்தியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராக வேண்டிய கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi leaves from Sultanpur Court, Uttar Pradesh.
— ANI (@ANI) July 26, 2024
He appeared before the court in connection with a defamation case filed against him for allegedly making objectionable remarks about Union Home Minister Amit Shah. pic.twitter.com/U2CoH1mLu9
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதாக ராகுல் காந்தி மீது 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி உள்ளூர் பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா கூறுகையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியதாகவும், தன் மீதான வழக்கு உண்மைக்கு புறம்பானது மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தொடரப்பட்டது என்றும் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அதேபோல் எதிர்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே கூறுகையில், அவதூறு வழக்கில் வாக்குமூலம் வழங்கிய ராகுல் காந்தி தன் மீதான வழக்கு அரசியல் ஆதாயத்திற்காக போடப்பட்டதாக கூறியதாக தெரிவித்தார். ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற உள்ள வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் வழக்கு தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வந்ததை அடுத்து அங்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ராகுல் காந்தியை காண பலர் அங்கு திரண்டதால் சில மணி நேரத்திற்கு அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதையும் படிங்க: "ராணுவத்திற்கு தேவையான சீர்திருத்தம் அக்னிபாத்...."- விஜய் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி! - PM Modi on Vijay Diwas