ஐதராபாத்: கடந்த சட்டமன்றத் தேர்தலின் மூலம் தெலங்கானாவில் தனது பலத்தை உறுதி செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளை வெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மாநில காங்கிரஸின் தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் ஈடிவி பேசுகையில், தெலங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவான நிலை இருக்கும் நிலையில், ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதி எனத் தெரிவித்துள்ளனர். ராகுல் போட்டியிடுவதற்காகக் கம்மம் மற்றும் புவனகிரி தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து ராகுல் காந்தி அங்கு களமிறங்குவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் நமது நிருபரிடம் கூறியுள்ளார்.
கடந்தாண்டு தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியிலிருந்த சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ரிய சமிதியை வீழ்த்திய காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. தென் மாநிலங்களில் கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் மாநிலம் தெலங்கானா என்பதால் காங்கிரஸ் தலைமைக்கு அந்த மாநிலத்தின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தியை தெலங்கானாவில் போட்டியிட தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினர். ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பாத சோனியா காந்தி மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் எப்படியாவது ராகுல் காந்தியை தெலங்கானாவில் களமிறக்கத் திட்டமிட்ட அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி ராகுல் காந்தியிடம் ஒப்புதல் பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது எம்பியாக உள்ள கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இம்முறை வயநாட்டில் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளராக ஆனி ராஜாவை இந்திய கம்யூனிஸ்ட் களமிறக்கியுள்ளது. ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.
இதனால், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியோடு மோதல் வேண்டாம் எனத் திட்டமிட்டு செல்வாக்கு மிக்க மற்றொரு மாநிலத்தில் களமிறங்க ராகுல் காந்தி இசைவு தெரிவித்துள்ளதால் தெலங்கானா காங்கிரசார் உற்சாகத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "எலான் மஸ்குக்கு கிடைக்காத குலசேகரன்பட்டினம்" விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுவது என்ன?