புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு குறித்த விவாதத்தில் வயநாடு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உரையாற்றினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு அவையால் ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் அரசியல் சட்டம் குறித்த இரண்டு நாள் விவாதம் இன்று மக்களவையில் தொடங்கியது. இந்த நிலையில் வயநாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா காந்தி, இந்த விவாதத்தில் பங்கேற்று முதன்முதலாக மக்களையில் தமது கன்னிப்பேச்சை தொடங்கினார்.
மக்களுக்கு அதிகாரம்: விவாதத்தில் பேசிய பிரியங்கா காந்தி,"உலகின் எந்த ஒரு நாட்டையும் போல அல்லாமல் நமது நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது வன்முறை அற்ற வகையிலும், உண்மை எனும் கொள்கை வேரையும் கொண்டிருந்தது. இந்த தனித்தன்மை வாய்ந்த அணுமுறை நமது பாதைய வேறு படுத்தி காட்டியது.நீதிக்கான உரிமையை அங்கீகரிக்கும் வலிமையை அரசியலமைப்பு மக்களுக்கு வழங்கியது. அரசுக்கு எதிராக தங்களது கோரிக்கையின் குரலை எழுப்பக் கூடிய அதிகாரம் கொண்டவர்களாக மக்களை அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியது.
இதையும் படிங்க: 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம்... குடியரசு தலைவர்,பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி!
நீதியின் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது: இந்திய அரசியல் சட்டமானது ஒரு கவசமாக மக்களை பாதுகாக்கிறது. ஆனால், ஆளும் கட்சி அதன் மரியாதையை குறைக்க மீண்டும் மீண்டும் முயற்சி மேற்கொண்டது. துரதிஷ்டவசமாக அந்த பாதுகாப்பு கவசத்தை உடைக்க ஆளும் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. நீதியில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அரசியலமைப்பின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனியார் மயமாக்கல், உயர் பதவிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை நியமிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு கொள்கையை பலவீனமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் இவ்வாறு வந்திருக்காவிட்டால், அவர்கள் (பாஜக) அரசியலமைப்பை மாற்றத் தொடங்கியிருப்பார்கள்.
#WATCH | In Lok Sabha, Congress MP Priyanka Gandhi Vadra says, " today, people of the country are demanding that there be a caste census. colleague of the ruling side mentioned this, the mention is also being made only because of these results in the lok sabha elections. the caste… pic.twitter.com/ngZ5k8skzY
— ANI (@ANI) December 13, 2024
சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. சாதி ரீதியான தரவுகள் மூலம் கொள்கை உருவாக்கம் மற்றும் சமூக நீதி தெளிவாக அமல்படுத்த முடியும். முன்னாள் பிரதமர் நேருவின் பெயரை புத்தகங்கள், உரைகளில் இருந்து அழிக்க முடியும். ஆனால், சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கு மற்றும் தேச கட்டமைப்பில் அவரது பெயரை நீக்க முடியாது"என்று கூறினார்.
அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் பேசி வருகின்றனர். இந்த விவாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுவார்.