ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சேரியல் மாவட்டம், பீமினி மண்டலத்தில் 95 ஆண்டுகள் பழமையான கெஸ்லாபூர் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிச் சுவர் சமீபத்தில் திடீரென இடிந்து விழுந்தது. அதனால் அந்த அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை காட்டுப்பள்ளி ஊராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
ஒரு வகுப்பறையைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த காட்டுப்பள்ளி ஊராட்சிப் பள்ளியில், கெஸ்லாபூர் தொடக்கப்பள்ளி மாணவர்களையும் சேர்த்து தற்போது 70 மாணவர்கள் உள்ளனர். இந்த 70 மாணவர்களுக்கும் 4 ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், ஒருவர் தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ளதால் 3 ஆசிரியர்கள் உள்ளனர்.
இதன் காரணமாக, இரண்டு பள்ளி மாணவர்களும் வகுப்பு வரம்பு இல்லாமல் ஒரு அறை மற்றும் தாழ்வாரத்தில் அமர்ந்து பொதுவான பாடம் எடுக்கப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கெஸ்லாபூர் தொடக்கப்பள்ளியை 'மன ஊரு-மன பாடி' என்னும் திட்டத்தின் கீழ் புதுப்பிக்க அரசு 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகக் கூறி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், அரசு முறைப்படி ஒப்பந்தததாரருக்கு பணத்தைச் செலுத்தவில்லை எனக் கூறி கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், இது குறித்து இன்று பீமினி மண்டல கல்வி அலுவலர் மகேஷ்வர் ரெட்டியை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டபோது, “இடிந்து விழுந்த பள்ளியை முழுமையாக இடித்து விட்டு புதிதாக பள்ளி கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமானப் பணி தொழில்நுட்பம் காரணமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இடிந்த விழுந்த பள்ளியின் புகைப்படம் இணைய விண்ணப்பத்தில் சரியாக பதிவு செய்யப்படாத காரணத்தால் அரசு நிதி வழங்க தாமதம் ஏற்பட்டிருக்கிறது” எனக் கூறினார்
இதையும் படிங்க: JEE தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவி.. திருச்சி என்ஐடியில் வாய்ப்பு