பெங்களூரு: கர்நாடக மாநில ஹசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூரு குற்றப்பிரிவு புலனாய்வு போலீசில் மதச்சார்பற்ற ஜனதா தள பெண் உறுப்பினர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரில், எம்பிகளுக்கான குடியிருப்புக்கு தன்னை அழைத்துச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ, புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டதாகவும், இது குறித்து வெளியில் கூறினால் தன்னையும் தனது கணவரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பாலியல் இச்சைகளுக்கு அடிபணியாவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, தனக்கு எதிரான விசாரணையில் ஆஜராகாமல் இருக்க பெண் ஒருவரை கடத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணா மீது கே.ஆர் நகர் போலீசார் ஆள்கடத்தல் வழக்குபதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் இருவரும் இதுவரை ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியதாக தகவல் பரவியது.
மத்திய அரசு தரப்பில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட தூதரக ரீதியிலான பாஸ்போர்ட்டை முடக்குமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார். அதேநேரம் பிரஜ்வல் ரேவண்னா ஜெர்மனி செல்ல விசா ஏதும் வழங்கப்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்? உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன? - Delhi Excise Policy Case