ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத்தின் நிறுவனருமான ராமோஜி ராவ் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 87 வயதான அவர், இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளர் ஆவார். அது மட்டுமல்லாது, ஈநாடு பத்திரிகை, ஈடிவி பாரத் நெட்வொர்க் போன்ற ஒட்டுமொத்த ராமோஜி குழுமத்தின் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குநர்கள் ஷங்கர், ராஜமெளலி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
அதேநேரம், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ராமோஜி ராவ் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், இளையராஜா, பவன் கல்யாண், சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜெகபதி பாபு, ராஜமெளலி, ரவி பிரகாஷ், பிரம்மானந்தம் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், நாளை காலை 9 மணி முதல் 11 மணிக்குள் ராமோஜி ராவ்-ன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சினிமா, மீடியா உலகின் ஜாம்பவான் ராமோஜி ராவ்.. கலையுலக வித்தகராக உருவான வரலாறு!