புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை ரூ.1.5 லட்சம் விலை பேசி காரைக்காலுக்கு கடத்திச் சென்ற பெண் மற்றும் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி திடல் நேரு சிலையின் பின்பகுதியில் தங்கி, பொம்மை உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி இவர்களின் 4 வயது பெண் குழந்தை சனன்யா காணாமல் போயுள்ளார்.
இது குறித்து முத்துபாண்டி, பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், குழந்தை கடத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இதில், புதுச்சேரி கணுவாய்ப்பேட்டை மூர்த்தி குழந்தையை கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், குழந்தையைக் கடத்தி விற்கும் கும்பலைச் சோ்ந்தவர்களால் பெண் குழந்தை கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு கடத்திச் சென்ற குழந்தையை உள்ளூர் போலீசார் உதவியுடன், புதுச்சேரி தனிப்படையினா் வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.
பின்னர், குழந்தையைக் கடத்தி விற்க முயற்சித்த காரைக்கால் பகுதியை சோ்ந்த ஜகபா் நாச்சியாா் (40), புதுச்சேரி கணுவாய்ப்பேட்டை மூர்த்தி (35), பூமியான்பேட்டை ஆகாஷ் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குழந்தையைக் கடத்தி கொண்டு வந்தால் ரூ.1.5 லட்சம் பணம் தருவதாக ஜகபா் நாச்சியாா் கூறியுள்ளாா். அதற்கு முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்ததால், பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தையைக் கடத்திச் சென்று ஜகபர் நாச்சியாரிடம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, குழந்தையை கடத்துவதற்காக கொடுத்த முன்பணம் ரூ.10 ஆயிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர், 3 பேரையும் நீதுமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். பணத்திற்கு ஆசைப்பட்டு குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை துறைமுகம் வந்தடைந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!