பலமு : ஜார்கண்ட் மாநிலம் கர்வா அடுத்த பாவ்நாத்பூர் பகுதியில் தாய் செலுத்தத் தவறிய கடனுக்காக 14 நாட்கள் மகனை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக மைக்ரோ பைபான்ஸ் நிறுவனம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவ்நாத்பூர் அடுத்த ரோகானியா பகுதியைச் சேர்ந்த பெண் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மைக்ரோ பைனாஸ் நிதி நிறுவனத்தில் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று உள்ளார். கடன் தொகையில் 22 ஆயிரம் ரூபாயை பெண் செலுத்தியதாக கூறப்படும் நிலையில் மீதத் தொகையை செலுத்த காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
மீதப் பணத்தை திருப்பிச் செலுத்தக் கோரி நிதி நிறுவன மேலாளர், அந்த பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த கைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வீட்டில் இருந்த பெண்ணின் மகனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஏறத்தாழ 2 வாரங்கள் அந்த சிறுவனை பாட்டில் உள்ளிட்ட பொருட்களை சேகரிக்க நிதி நிறுவன மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கிராம மக்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை மீட்டு குழந்தை நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், நிதி நிறுவன மேலாளரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக நிதி நிறுவன மேலாளரை பணியிடை நீக்கம் செய்ததாகவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் நிதி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு தாய் வாங்கிய கடனுக்கு மகனை அழைத்துச் சென்று 14 நாட்கள் துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மத்திய பிரதேச தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து! எப்படி நடந்தது?