ஜம்மு: பிரதமர் மோடி இன்று (பிப்.20) ஜம்மு செல்கிறார். அங்கு ரூபாய் 30 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதனை ஒட்டி, இந்திய எல்லையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்திற்கு இன்று காலை 11:30 மணியளவில் வருகை தரும் பிரதமர் மோடி, விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, தேவிகா நதிநீர் திட்டம், செனாப் ரயில்வே பாலம் போன்றவற்றை திறந்து வைக்கிறார்.
ஜம்மு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான திட்டத்திற்கும், டெல்லி முதல் ஜம்மு கத்ராவை இணைக்கும் சாலை விரிவாக்க பணிகளுக்கும், ஜம்முவில் உள்ள CUF (Common User Facility) பெட்ரோலியக் கிடங்கில் புதிய முனையம் அமைப்பதற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பகுதியில் முதல் மின்சார ரயில் சேவையையும் திறந்து வைக்கிறார்.
மேலும் ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் புத்தகயா, ஐஐஎம் விசாகப்பட்டினம் உள்ளிட்ட மூன்று புதிய ஐஐஎம்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு 20 புதிய கட்டிடங்களையும், நவோதயா வித்யாலயாக்களுக்கு 13 புதிய கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார். மேலும் ஒரு நவாதயா வித்யாலயா உள்பட 5 கேந்திரிய வித்யாலயா வளாகங்களில் ஐந்து பல்நோக்கு அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டவுள்ளார்.
ஐஐடி பிலாய், ஐஐடி ஜம்மு, ஐஐடி திருப்பதி, ஐஐடிஎம் காஞ்சிபுரம், ஐஐஎஸ் கான்பூர், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர வளாகம் அமைக்கும் பணிகளையும் மோடி துவங்கி வைக்கிறார். ஜம்முவில் அரசு பணிக்கு தேர்வான ஆயிரத்து 500 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார்.
இது மட்டுமில்லாமல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கல்லூரி கட்டிடங்கள், ஸ்ரீநகர் நகரத்தில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, நவீன நர்வால் பழ மண்டி, கதுவாவில் போதைப்பொருள் பரிசோதனை ஆய்வகம், ஜம்முவில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கான தரவு மையம், பேரிடர் மீட்பு மையம் போன்றவற்றை திறந்து வைக்கிறார்.
மேற்கூறிய 30 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், விக்சித் பாரத்; விக்சித் ஜம்மு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
இதையும் படிங்க: "செங்கோட்டையில் கழிப்பறை பிரச்சினை, பெண்கள் கண்ணியம் குறித்து பேசிய முதல் பிரதமர் நான்" - பிரதமர் மோடி!