டெல்லி: வேலையின்மைப் பிரச்னை இந்தியாவில் பெரும் பிரச்னையாக இருந்து வரும் நிலையில், அதனை சரிசெய்யும் விதமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
அதன்படி, நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அந்த வகையில், 'ரோஜ்கர் மேளா' என்ற பெயரில் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் மூலம் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.12) நாடு முழுவதும் உள்ள 47 இடங்களில் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் மத்திய அரசின் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர்கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்புத் துறை, நிதிச் சேவைத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய பல்வேறு பதவிகளுக்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகளில் சேரவுள்ளனர்.
அவ்வாறு சேரவுள்ள அந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, பணி நியமன ஆணைகளைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக வழங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த வளாகமான "கர்மயோகி பவன்" முதல் கட்டடத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிங்க: "நாட்டை கொள்ளையடிப்பது, பிளவுபடுத்துவதே காங்கிரசின் குறிக்கோள்" - பிரதமர் மோடி!