டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பல இடங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதாகவும், கேரளாவில் ஒரு எம்பி கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் போட்டியிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கர்நாடகாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது என்றார்.
இந்திய தேர்தல் முறையை கண்டு உலகமே பிரம்மிப்பதாக கூறிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் பரப்பிய பொய்களுக்கு மத்தியில் மக்கள் நம்பிக்கை வைத்து பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்து உள்ளதாக கூறினார். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண் கூடாக தெரிவதாகவும் 3வது முறை ஆட்சிக்கு வந்துள்ள பாஜக இனி 3 மடங்கு வேகத்தில் பணியாற்றும் என்றார்.
இந்தியாவை வல்லரசாக்க வாரத்தில் அனைத்து நாட்களும் உழைப்பதாகவும், இந்திய பொருளாதாரத்தை கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்துக்கு முன்னேற்றி உள்ளதாகவும் கூறினார். மேலும் பொருளாதாரத்தை 3வது இடத்துக்கு முன்னேற்ற தேவையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களவையில் பாஜகவை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொள்கின்றன, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றார். கடந்த 1984ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஒருமுறை கூட 250க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறவில்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் 100 இடங்களுக்கும் குறைவாகவே தேர்தலில் வென்றுள்ளதாகவும், தங்கள் தோல்வியை காங்கிரஸ் கட்சியினர் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கேரளாவில் ஒரு எம்பி கிடைத்து உள்ள நிலையில் அங்கு கணக்கை தொடங்கிவிட்டதாகவும், தமிழகத்தில் பாஜக சிறப்பாக செயல்பட்டது என்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தது என்றும் பிரதமர் மோடி பேசினார்.
கர்நாடகாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் எதிர்வரும் மகாரஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க: LIVE: மக்களவையில் பிரதமர் மோடி உரை! ராகுல் கேள்விகளுக்கு பதில்? - PM Modi Speech In Parliament