திருவனந்தபுரம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள 4 வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.27) அறிமுகப்படுத்தினார். திருவனந்தபுரத்தில் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்வெளி வீரர்களின் அறிமுக விழா நடைபெற்றது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் மூலம், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேர் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி முரளீதரன், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் உள்ளிட்ட உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் மோடி அறிவித்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ககன்யான் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரப்படுவர்.
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, “விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்கள் தனிநபர்கள் அல்ல. 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை விண்வெளிக்கு கொண்டு செல்பவர்கள். அவர்கள் இந்தியாவின் நம்பிக்கை, பலம் மற்றும் பெருமை. அவர்கள் 4 பேருக்கும் தேசத்தின் ஆசீர்வாதம் துணை இருக்கும்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளிக்குச் செல்கிறார். இந்த முறை நேரமும் நமதே, கவுண்ட் டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே. இன்று இந்த 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து, அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விண்வெளி வீரர்களின் கடும் பயிற்சியில் யோகாவும் முக்கிய பங்காற்ற உள்ளது. ஒரே எண்ணத்துடன் தவம்போல் பயிற்சி செய்ய உள்ள விண்வெளி வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். இந்த திட்டத்தால் இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு, பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது” என பேசியுள்ளார்.
ககன்யான் திட்டத்திற்காக பயன்படும் கருவிகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று பெருமிதம் தெரிவித்த பிரதமர், இது விண்வெளி ஆய்வில் நாட்டின் தன்னம்பிக்கையை அடிக்கோடிட்டு காட்டுவதாக” கூறினார். தொடர்ந்து விண்வெளி பயணத்திற்காக வீரர்கள் மேற்கொண்டு வரும் பயிற்சி குறித்த காணொளியும் வெளியிடப்பட்டது.