குஜராத்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்நாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவர் குஜராத் சென்றுள்ளார். பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில், நலத்திட்டப் பணிகளில் ஒன்றான கேபிள் பாலம் ஒன்றை, மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (பிப்.25) திறந்து வைத்துள்ளார்.
'சுதர்சன் சேது' என்று பெயரிடப்பட்ட இந்தப் பாலம், குஜராத் ஓகா என்ற பகுதியையும், அரபிக்கடலிலுள்ள தீவு பகுதியான பேட் துவாரகா என்ற பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டு, இன்று (பிப்.25) பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாலத்தின் பணிகள், ரூ.980 கோடி மதிப்பீட்டில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் குஜராத் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. சுதர்சன் சேது பாலத்தை சிக்னேச்சர் பாலம் (Signature bridge) என்றும் அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர். 2.32 கி.மீ தொலைவு கொண்ட இந்தப் பாலம், 4,772 மீ நீளமும், 900 மீ நீள கேபிள் பகுதியையும் கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையின் எண் 51-இன் ஒரு பகுதியாக நான்கு வழிச் சாலையாக கட்டப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மிக நீளமான கேபிள் சாலையைக் கொண்ட மாநிலமாக தற்போது குஜராத் விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக நடைபாதை, தனித்துவ வடிவைப்பு மற்றும் பாலத்தின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமான சிறப்பம்சமாக பார்க்கப்படுவது சோலார் தகடுகள்தான். பாலத்தின் மேற்பகுதியில் பதிக்கப்பட்ட இந்த சோலார் தகடுகள், ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேட் துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோயிலுக்குச் செல்வதற்காக அப்பகுதி மக்கள் இந்த சுதர்ஷன் சேது பாலத்தை அதிக அளவில் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், குஜராத் ஓகா பகுதியில் இருந்து பேட் துவாரகா பகுதியிலுள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்ல 30 கி.மீ படகில் பயணிக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது சுதர்ஷன் சேது பாலம் மூலம் அந்தப் பயணம் மிக எளிமையாகிவிட்டது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாது, சுதர்ஷன் சேது பாலத்தின் இருபுறங்களிலும் பகவத்கீதை வசனங்கள், கிருஷ்ணரின் வரைபடங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பாலம் ஆன்மீகம் மட்டுமின்றி, நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்த பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பேட் துவாரகாவில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து, சுதர்ஷன் சேது பாலத்தின் சிறப்பை போற்றும் வகையில், பிரதமர் மோடி அவரது 'X' வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதையும் படிங்க: ஓட்டுநர் இல்லாமல் 78 கி.மீ வரை ஓடிய சரக்கு ரயில்.. ரயில்வே துறையினர் விசாரணை!