புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர் காலக்கூட்டத்தொடரின் 11ஆவது நாளான இன்று வழங்கம் போல் இரு அவைகளும் கூடின. மக்களவை கூடியதும் இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். எனவே முதலில் மக்களவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும 12 மணிக்கு கூடியும், மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் வணிகக் கப்பல் மசோதா, 2024 ஐ அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர்,"கடல்சார் ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவின் பங்களிப்புக்கு இணக்கம் தெரிவிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்தியாவின் நலன்களுக்கு ஏற்ப இந்திய கப்பல் வணிகத்தை வளர்த்தெடுப்பதை முன்னெடுப்பதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது,"என்றார்.
இதற்கு காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி கடும் எதிர்ப்புத் தெரிவிததார். இது சட்டமியற்றும் தகுதி பெற்றதல்ல என்று விமர்சனம் செய்தார். இதனிடையே, பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ்-ஜார்ஜ் சோரோஸ் தொடர்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல்: மாநிலங்களவை இன்று கூடியதும் கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தெரிவித்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "கிருஷ்ணா ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் திறமையான நிர்வாகியும் ஆவார். இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது," என்று குறிப்பிட்டார். அவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தரப்பில் இருந்து காங்கிரஸ்-ஜார்ஜ் சோரோஸ் இடையேயான தொடர்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் தரப்பில் அதானி மீதான அமெரிக்க வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இருதரப்பினரும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் இட்டனர். இதனால் மாநிலங்களவையில் அமளி நிலவியது. இதையடுத்து முதல் ஒரு மணி நேரம் மாநிலங்கள் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அவை தொடங்கியபோது விதி 267ன் கீழ் விவாதிக்க வேண்டி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்திருப்பதாக அவை தலைவர் தன்கர் கூறினார். ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் நோட்டீஸை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்த சஞ்சய் சிங், தலைநகர் டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனிடையே ஆளும் கட்சி எம்பிக்கள் தங்களுடைய கோரிக்கையை விவாதிக்க வேண்டும் கோஷமிட்டனர். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.