சீரம்போர்: மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க காங்கிரஸ் துளி அளவும் குரல் கொடுக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயர் தெரிவிப்பதாகவும் கடுமையாக சாடினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது குறித்து பேசினார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தற்போது அமைதியான சூழல் திரும்பியுள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.
அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் சுதந்திரத்திற்கான குரல் எழத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கான முழக்கம் எழுந்தது போல் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் எழத் தொடங்கியுள்ளதாக அமித் ஷா கூறினார்.
சுதந்திரத்திற்காக முன்பு ஜம்மு காஷ்மீரில் வீசப்பட்ட கற்கள் தற்ப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வீசப்படுகிறது என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்த அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க காங்கிரஸ் குரல் கொடுக்கவில்லை என்றும் மாறாக பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக மணி சங்கர் ஐயர் மிரட்டுவதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும் விரைவில் அது மீட்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், நடப்பு மக்களவை தேர்தல் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த இந்தியா கூட்டணி தலைவர்களை தேர்ந்தெடுப்பதா அல்லது நேர்மையான அரசியல்வாதி நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பதா என்பதற்கான மக்களின் விருப்பம் என்றார்.
முதலமைச்சராக இருந்து ஒரு பைசா கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் பிரதமரானவர் நரேந்திர மோடி என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். ஊடுருவல்காரர்களா அல்லது அகதிகளுக்கான சிஏஏ சட்டமா என்பதையும் ஜிகாத்தா அல்லது வளர்ச்சியா என்பதையும் மேற்கு வங்க மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் அமித் ஷா கூறினார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்ததற்காகவும், தனது வாக்கு வங்கியை ஸ்திரத்தன்மையோடு வைத்திருக்கவே ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக பேரணிகளை நடத்தியதாகவும் அமித் ஷா சாடினார்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் தாமிர சுரங்க லிப்ட் கயிறு அறுந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி! 14 பேர் பத்திரமாக மீட்பு! - Rajasthan Mine Lift Collapse