டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22ம் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்றைய தினம் (ஜூலை 23) தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு எதிராக இருப்பதாகக்கூறி இந்தியா கூட்டணியை சார்ந்த தலைவர்கள் இன்று பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நாடு முழுவதுமுள்ள விவசாய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் நாடாளுமன்றத்துக்கு வந்த விவசாய தலைவர்கள் அனுமதிக்கப்படாததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி '' எங்களை சந்திப்பதற்காக விவசாய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அவர்களை பாராளுமன்றத்திற்கு உள்ளே விடவில்லை. விவசாயிகள் என்பதால் அவர்களை அனுமதிக்கவில்லை என்ற காரணமாக இருக்கலாம்' என்றார்.
அதன் பின்னர் அங்கு வந்திருந்த விவசாய தலைவர்கள் ராகுல் காந்தியின் அலுவலகத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து கோரிக்கைகளை வழங்கினர். சந்திப்பின் முடிவில் விவசாயிகளுக்கு உறுதியளித்த ராகுல் காந்தி, கோரிக்கைகள் தொடர்பாக இந்தியா கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கிடைப்பதை உறுதி செய்யும்' என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் 5 கோரிக்கைகளை பட்டியலிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமை ஒரு மாநில அரசுக்கு ஏன் இருக்கக்கூடாது? ஒரு மாநிலத்தின் டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி ஏன் பங்கு வகிக்க வேண்டும்? கடந்த காலத்தில் இந்த அரசு ஆந்திராவை ஏன் வித்தியாசமாக நடத்தியது? நீங்கள் ஆந்திரா மற்றும் பீகாருக்கு அதிக நிவாரணம் தருகிறீர்கள் என்பதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை.. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு வழங்க ஏன் மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும், நிதியமைச்சர் சீதாராமன் தனது முழு பட்ஜெட் உரையிலும் தமிழகத்தையும், தமிழ் என்ற வார்த்தையை ஏன் புறக்கணித்தார் என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து ப. சிதம்பரம் வெளியிட்ட ஐந்து கோரிக்கைகள்;
1. ஒவ்வொரு வகையான வேலைக்கும் நாளொன்றுக்கு ரூ.400 குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க வேண்டும்.
2. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
3. நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் விலக்கு அளித்துவிட்டு எதிர்ப்பில்லாத மற்ற மாநிலங்களில் நடத்த வேண்டும்.
4. மார்ச் 2024 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்களின் தவணைக்கான வட்டியில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.
5. அக்னிபாத் மற்றும் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆகிய ஐந்து கோரிக்கைகளை வைத்தார்.
இதையும் படிங்க: "தமிழ்நாடும் இல்லை.. திருக்குறளும் இல்லை.."- நாடாளுமன்றம் முன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!