கவுகாத்தி: வங்க தேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய வன்முறையாக வெடித்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். இதனை அடுத்து அந்நாட்டில் போராடியவர்கள் பிரதமர் அலுவலகத்தை சூறையாடினர். இப்போராட்டத்தின் எதிரொலியாக வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்கள் தாக்கப்பட்டு அவர்களது உடைமைகள் அழிக்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இதுகுறித்து வங்கதேச தேசிய இந்து மகா கூட்டணியின் பொதுச்செயலாளர் கோபிந்த சந்திர பிரமாணிக் ஈடிவி பாரத்துக்கு காணொளி வாயிலாக அளித்த தகவலில், '' ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, வங்க தேசத்தில் உள்ள இந்து சமூகத்தினர் தாக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் தீ வைத்து கொளுத்தப்படும் என அஞ்சினார்கள். அந்த சமயத்தில், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்க தேச தேசியவாதக் கட்சி தலைவர்கள், இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்துத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினர். இதனால், கோவில்கள் மற்றும் இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.
மேலும், வன்முறையின்போது அவாமி லீக்கின் இந்து தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதேபோல, அவாமி லீக்கின் முஸ்லீம் தலைவர்களுக்கும் இதேதான் நடந்தது. இந்த வன்முறையை பயன்படுத்திக்கொண்ட சிலர் கோவில்களை தாக்கினர். இருப்பினும், பெரிதளவில் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. சில இடங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டது போல முஸ்லிம்களும் தாக்குதலில் பலியாகியுள்ளனர். வங்க தேச வன்முறையில் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்துக்கள் தாக்கப்படவில்லை. வங்க தேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரமாணிக், வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடக்கலாம் என்று இந்தியாவில் நிறைய பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விவகாரம் குறித்து சில இந்திய ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருகின்றன. வங்க தேசத்தில் அதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. வாய்ப்பு தேடும் சிலர் இந்துக்கள் மீது குறி வைக்கின்றனர் என தெரிவித்தார்.
வங்க தேசத்தில் 7.95 சதவீத இந்துக்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையான சதவீதம் அதிகமாக இருக்கலாம் என பிரமாணிக் கூறினார். மேலும், இங்கு 2015 இல் 10.7 சதவீதமாக இருந்த இந்து மக்கள் தொகை மத மாற்றம் மற்றும் புலம்பெயர்ந்த காரணங்களால் குறைந்துள்ளது என தெரிவித்தார்.
1971க்குப் பிறகு வங்க தேசத்தில் இருந்து சுமார் 4.5 கோடி இந்துக்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், வங்க தேசத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்து மக்கள் தொகை 2.8 சதவீதம் குறைந்துள்ளது எனவும் பிரமாணிக் தெரிவித்தார். தற்போதும் இந்துக்கள் வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குடியேறுவதாக தெரிவித்த அவர், வங்க தேச இந்துக்கள் பலர் மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அந்தமானில் 90 சதவீத இந்துக்கள் புலம்பெயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: 'எங்களது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்'.. ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் பதில்..!