டெல்லி : கச்சத்தீவு விவகாரம் பூதாகரம் அடைந்து உள்ள நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சர்மாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம். இது தொடர்பாக ப சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், "பழிக்கு பழி என்பது பழையது. ட்வீட்டுக்கு டவீட் என்பது புது ஆயுதம்.
கச்சத்தீவு குறித்த ஆர்டிஐக்கு பதிலளிக்கப்பட்ட 27-1-2015 தேதியை வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் மீண்டும் பார்க்க வேண்டும் என வேண்டுகிறேன். அதே 27-1-2015 தேதியில் வெளியுறவு அமைச்சராக ஜெய் சங்கர் இருந்தார் என எண்ணுகிறேன். ஆர்டிஐ பதிலில் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது சரிதான் என நியாயப்படுத்தப்பட்டு உள்ளது.
அப்படி இருக்கையில் தற்போது வெளியுறவு அமைச்சரும், அமைச்சகமும் திடீரென பல்டி அடிக்க என்னக் காரணம்? எப்படி மனிதர்களால் இவ்வளவு வேகமாக நிறம் மாற முடிகிறது. மென்மையான மற்றும் சுறுசுறுப்பான, தாராள எண்ணம் கொண்ட வெளியுறவு அதிகாரி முதல் புத்திசாலித்தனமான வெளியுறவு அமைச்சர், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் ஆதரவாளர் வரை ஜெய் சங்கரிம் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்படும்" என ப சிதம்பரம் பதிவிட்டு உள்ளார்.
மேலும், மற்றொரு பதிவில், "கடந்த 50 ஆண்டுகளில் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டது உண்மைதான். அதேநேரம் இந்தியாவும் எல்லைத் தாண்டிய இலங்கை மீனவர்களை தடுத்து வைத்து உள்ளது. ஒவ்வொரு அரசும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது மீனவர்களையும் விடுவித்து உள்ளது.
இது ஜெய் சங்கர் வெளியுறவு அமைச்சக அதிகாரியாக இருந்த போதும், வெளியுறவுத்துறை செயலளாராகவும், வெளியுறவு அமைச்சராக இருந்த போதும் நடந்து உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ்க்கு, திமுகவுக்கும் எதிராக திடீரென ஜெய் சங்கர் வசைபாட காரணம் என்ன?. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மீனவர்கள் தடுத்து வைக்கப்படவில்லையா?.
பாஜக ஆட்சியில் இருக்கும் போதோ அல்லது கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதோ, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் இருந்த போதும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படவில்லையா?, ஏன் 2014 ஆம் ஆண்டு முதல் மோடி பிரதமராக பதவி ஏற்றபின் ஒரு மீனவர் கூட இலங்கை கடற்படையால் கைது செய்யப்படவில்லையா?" என்று ப சிதம்பரம் பதிவிட்டு உள்ளார்.
முன்னதாக கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலை மேற்கொள்காட்டி திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த நிலையில், இன்று (ஏப்.1) காலை மத்திய வெளியுறவு அமைச்சர் அது தொடர்பாக பேட்டி அளித்தார்.
அப்போது அவர், கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 184 மீனவர்கள் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், ஆயிரத்து 175 இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை அரசு கைப்பற்றியதாகவும் கூறினார். மேலும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கச்சத்தீவை இலங்கை வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருந்ததாகவும், கச்சத்தீவை சிறிய தீவு, சிறிய பாறை என ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் குறிப்பிட்டதாகவும் ஜெய் சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தோஷாகானா ஊழல் வழக்கு: இம்ரான் கானின் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு! - Imran Khan