புதுடெல்லி:'ஒரே நாடு; ஒரே தேர்தலை' நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்த குழு தனது ஆய்வு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாகவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன
இந்நிலையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு, பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால் ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு நாங்கள் துணை நிற்கமாட்டோம். இது ஜனநாயகத்துக்கு ஒத்துவராது. நமது ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் தேவைப்படும்போது தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்." என்றார்.
இதையும் படிங்க: சுசேதா கிருபளானி முதல் அதிஷி வரை.. முதல்வர் பதவியை அலங்கரித்த பெண்கள் பட்டியல்!
இதேபோல், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசியும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தலை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். ஏனெனில் இது கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஜனநாயகத்தை சமரசம் செய்கிறது.
பல தேர்தல்கள் என்பது மோடி மற்றும் அமித் ஷாவைத் தவிர யாருக்கும் பிரச்சனை இல்லை. உள்ளாட்சித் தேர்தல்களில் கூட பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. அடிக்கடி மற்றும் அவ்வப்போது நடைபெறும் தேர்தல்கள் ஜனநாயகப் பொறுப்புணர்வை மேம்படுத்துகின்றன" என்று ஒவைசி தெரிவித்தார்.