சென்னை: பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள ஜமுஹர் கிராமத்தில் 1 வயது குழந்தை, சுமார் 3 அடி நீளமுள்ள பாம்பை பொம்மையாகக் கருதி, விளையாடியபடி வாயில் போட்டு மென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைவரும், அய்யோ குழந்தைக்கு என்னாச்சு என பதறவைக்கு நிகழ்வாக இருக்கலாம். ஆனால், இதில் தான் சம்பவத்தின் சுவாரஸ்யமே உள்ளது. பாம்பை மென்று தின்ற குழந்தை ஆரோக்கியமாக துருதுருவென விளையாடிக் கொண்டிருக்க, கடிபட்ட பாம்பு உயிரிழந்துள்ளது.
பொம்மையா? பாம்பா? ஆ.. கடித்து பார்போம்: கயா மாவட்டத்தின் ஃபதேபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி கயா. இங்கு 1 வயதாகும், தவளும் பருவத்தில் இருக்கும் குழந்தை ஒன்று பாம்பை பொம்மை போல் கருதி மெல்ல ஆரம்பித்துள்ளது. பின், நேரம் போக போக அதோடு விளையாடியபடி, பாம்பு உடலின் நடுப்பகுதியை மென்று தின்றுள்ளது. இதைப் பார்த்த குழந்தையின் தாய் பதறியடித்தபடி ஓடி வந்து, குழந்தை வாயில் இருந்த பாம்பை தூக்கி வீசி எறிந்து விட்டு, குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பலியான பாம்பும், ஆரோக்கியமான குழந்தையும்: மருத்துவர்கள் குழந்தை கடித்த பாம்பு குறித்த தகவலை தாயிடம் கேட்டுள்ளனர். ஆனால், பாம்பைப் பற்றிய தகவல் எதும் அறியாத தாய், சம்பவத்தை மட்டும் விவரித்ததன் அடிப்படையில், குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பரிசோதனைக்குப் பின் குழந்தை ஆரோக்கியமாக உள்ளார், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விநோத வழக்கால் அதிர்ச்சியான மருத்துவர்களும், காவல்துறையினரும்: மேலும், “குழந்தையை கடித்த பாம்பு விஷம் இல்லா பாம்பு. அதனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படாமல், குழந்தை இயல்பாக உள்ளது. இவ்வளவு பெரிய பாம்பை யாரேனும் பார்த்திருந்தால் பயந்திருப்பார்கள். ஆனால், இந்த குழந்தை உயிர் உணர்ச்சியுடன் இருந்த பாம்போடு விளையாடி, மென்று தின்றுள்ள நிகழ்வு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற விநோதமான வழக்கை இப்போது தான் பார்க்கிறோம்'' என மருத்துவர் அசோக் குமார் சிங் கூறினார்.
மேலும், இது குறித்து பேசிய ஃபதேபூர் காவல் துறையினர், “இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி (சனிக்கிழமை) ஃபதேபூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஜமுஹர் கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் 1 வயது குழந்தை மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது பாம்பை தின்றதாக தகவல் தந்தனர். பின், இது குறித்து ஆராய்ந்ததில் மொட்டை மாடி ஓட்டை வழியாக பாம்பு வந்துள்ளது, இதைப் பார்த்து ஓடி அதைப் பிடித்து விளையாடிய குழந்தை பொம்மையென நினைத்து பாம்பை கடித்து மென்று உள்ளார்” என்றார். மேலும், அந்த பாம்பின் தோற்றத்தை வைத்து பார்க்கும் போது, அது மண்புழு போல தோற்றமளிக்கும் தெலியா வகை பாம்பாக இருக்கலாம், அந்த பாம்புகள் விஷமில்லதாவை என கிராம மக்கள் கூறினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விளையாடிய பாம்புகளை பிரித்த மக்கள்.. குழியில் பதுங்கிய பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர்!