நந்தேடா : மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடா மற்றும் ஹிங்கோலி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாட்டில் மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக அதிக வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜூன் 4ஆம் தேதி வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி பெறும். கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்ததை போல காங்கிரஸ் இளவரசர் இந்த மக்களவை தேர்தலில் கேரளா வயநாட்டிலும் தோல்வியடைவார். ஏப்ரல் 26க்கு பின்னர் ராகுல் காந்தி வேறு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேட வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாததால், இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு போட்டியிட்டுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பிரச்சினைகளை சரி செய்ய 10 ஆண்டுகள் ஆனது. அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருந்தது. தற்போது எந்தவிதமான விவசாய சிக்கல்களும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கைகளாலேயே அது நடந்தது.
நாட்டின் எதிர்காலத்தை மக்கள் நம்பி ஒப்படைக்கும் ஒரு முகம் இந்தியா கூட்டணியில் இல்லை. அப்படி ஒருவரை அவர்கள் முன்னிருத்தவும் இல்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைவரும் தங்களின் ஊழல்களை மறைப்பதற்காகவே சுயநலத்தோடு ஒன்றிணைந்து உள்ளனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் தங்களது உரிமைகளை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதன் மூலம் சர்வதேச அளைவில் இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்கிறீர்கள். இந்திய தேர்தல்கள் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக முயற்சித்து வருகிறது. அதேநேரம், 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு கண்ட தோல்விகளில் இருந்து எழுச்சி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி போராடி வருகிறது.
இதையும் படிங்க : தேர்தல் பணி முடிந்து திரும்பிய போது சோகம்! போலீசார் பயணித்த பேருந்து விபத்து! 21 பேர் காயம்! - MP Police Bus Accident