டெல்லி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவை இன்று ஏற்றுக் கொண்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு பரவலாக ஆதரவு உள்ளது. இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தலையும், 2ம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த முயற்சிப்போம். இந்த முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒருமனதாக எடுத்தது. இதனை நடைமுறைப்படுத்தும் குழுவை நாங்கள் அமைப்போம்." என்றார்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை அமைச்சரவையின் முன் வைப்பது என்பது சட்ட அமைச்சகத்தின் 110 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உயர்மட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் செலவுகளை மிச்சப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், ஜனநாயக அடிப்படைகளை ஆழப்படுத்தவும் உதவும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்திய தேர்தல் ஆணையம், பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாரிக்கவும், ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைத்தது. தற்போது, மக்களவை, சட்டப் பேரவை தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்று நடத்துகிறது. நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் கமிஷன்கள் நிர்வகிக்கின்றன.
ராம்நாத் கோவிந்த் குழு, 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை. எனினும், இவற்றுக்கு சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தேவைப்படும். அவை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒரே வாக்காளர் பட்டியல், ஒரே வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சில உத்தேசிக்கப்பட்ட மாற்றங்களுக்கு குறைந்தது பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்ட ஆணையமும் 'ஒரே நேர தேர்தல்கள்' குறித்த தனது அறிக்கையை விரைவில் கொண்டு வர வாய்ப்புள்ளது.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் ஆகிய 3 அடுக்குகளுக்கும் வரும் 2029ம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு சட்டசபை அமைவது போன்ற சூழலில் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்யவும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.