புதுச்சேரி: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று (பிப்.25) புதுச்சேரிக்கு வருகைத் தந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஓம்சக்தி சேகர் தலைமையில் தனியார் ஹோட்டலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக 'இரட்டை இலை' சின்னத்தில் தான் போட்டியிடுவோம். நாங்கள் பாஜக கூட்டணியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இருக்கின்றோம். எடப்பாடி தான் சென்றுவிட்டார். முதலில் இருந்து தற்போது வரை எடப்பாடி கே.பழனிசாமிக்கு வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளும் தற்காலிக தீர்ப்புகள்தான்.
சிவில் சூட்டில் கவனித்துத் கொள்ள உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், முன்னாள் தீர்ப்புகள் பொருந்தாது. சிவில் சூட்டில் வழங்கப்படும் தீர்ப்புதான் இறுதியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது எந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமியை யாரும் நம்பத் தயாராக இல்லை. அச்சூழல் அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ளது' எனக் கூறினார்.
மேலும், 'நல்லது செய்தவர்களுக்கு நன்றியில்லாமல் நடந்ததால், அரசியல் கட்சிகள் அவரை நாடுவதில்லை. அதனால், எடப்பாடியை தவிர்க்கிறார்கள். எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பதை இறுதி செய்தப் பிறகு அறிவிப்போம். நாங்கள் அமமுக பொதுச் செயலாளர் தினகரனுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். சிறந்த மனிதாபிமானம் மிக்க ஒரு நடிகர் என்றால், அது ரஜினிதான். அனைவருக்கும் மரியாதை தரக்கூடியவர். சசிகலா அழைத்ததால் சென்று பார்த்துள்ளார்.
மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேரும் வாய்ப்பு இல்லை. முதலில் விமர்சனம் செய்தது எடப்பாடி அணிதான். அதற்கு பதில்தான் அண்ணாமலைத் தருகிறார். இரட்டை இலை சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். எடப்பாடி தரப்பு போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..