டெல்லி: இளங்கலை படிப்புகளுக்கான மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-UG) கடந்த மே 15, 16, 17, 18, 21, 22, 24, மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்தியாவிற்கு வெளியில் 26 நகரங்கள் உள்பட 379 நகரங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வானது CBT மற்றும் பேனா மற்றும் காகித முறையில் நடைபெற்றது. பின்னர், இதற்கான விடைகளும் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து, தேர்வர்களிடம் இருந்து தேர்வு குறித்த குறைகள் மற்றும் வினா குளறுபடிகள் தொடர்பான கருத்துகள் கடந்த ஜூலை 7 - 9 வரை க்யூட் - யூஜியின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு வருகிற ஜூலை 19 அன்று மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வானது கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு பாட குறியீடு அனுப்பப்படும் எனவும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் எனவும், அதன்பிறகு வழக்கம்போல ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. முன்னதாக, நீட் தேர்வு, தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் குழப்பம் ஏற்பட்டு மத்திய கல்வி அமைச்சகத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: ஜுலை 18-க்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை; என்ன காரணம்?