கேரளா: தமிழகம் மற்றும் கேரளாவில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 53 வழக்குகளில் தொடர்புடைய பிரபல குற்றவாளி சிறை வளாகத்தில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் இரு மாநிலங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பிரபல குற்றவாளியான இவர் மீது தமிழக மற்றும் கேரளாவில் கொலை முயற்சி உட்பட 53 திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று தமிழக போலீசார் பாலமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, இரவு 9 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவில் உள்ள விய்யூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் சிறை வளாகத்தை அடைந்தப் பிறகு போலீசார், பாலமுருகனின் கை விலங்கை கழட்டியுள்ளனர். அப்போது பாலமுருகன் போலீசாரை தாக்கிவிட்டு சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். போலீசார் முயற்சித்தும் பாலமுருகனைப் பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் விய்யூர் சிறை வட்டாரத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 53 திருட்டு வழக்குகளில் தமிழக போலீசாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி ஆவார். இதனையறிந்த பாலமுருகன் தமிழகத்தை விட்டு வெளியேறி கேரளாவுக்கு வந்தார். பின்னர் அங்குள்ள மறையூர் என்ற பகுதியில் திருட்டு வழக்கில் சிக்கி கேரளா போலீஸ் அவரை கைது செய்தது.
அப்போது விசாரணைக்காக அழைத்து சொல்லப்படும்போது இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறி, அங்குள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு சென்ற பாலமுருகன் காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். பின்னர், 10 நாட்கள் கழித்து கேரளா போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள வழக்குகள் மீதான விசாரணைக்கு பாலமுருகனை இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக காவல்துறை அவரை அழைத்து வந்துள்ளது. அதன்படி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு நீதிமன்ற காவலுக்காக கேரளாவில் விய்யூர் சிறைக்கு கொண்டு சென்ற பின்னர் சிறை வளாகத்தில் இருந்தே பாலமுருகன் தப்பி ஓடியுள்ளார்.
பாலமுருகன் ஏற்கனவே போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பியதால்தான் அவரை உயர் பாதுகாப்புக் கொண்ட விய்யூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அங்கிருந்தும் அவர் தப்பி சென்ற சம்பவம் இரு மாநில காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், பாலமுருகன் தப்பியோடியதற்கு வெளியுலக ஆதரவு இருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: சுவாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு - கெஜ்ரிவால் செயலாளர் கைது