கொல்கத்தா: ஜப்பானில் இருக்கும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை (சாம்பல்) இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவான் விமான விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இதுகுறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு அறிக்கையும் வெளியானது. மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய கோப்புகள் மத்திய அரசிடம் இருப்பதாகவும் கடந்த காலங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேதாஜியின் அஸ்தியை மீட்டுத் தருமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவரது பேரன் சந்திர குமார் போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜியைப் பற்றிய தவறான வதந்திகள் நிறுத்தப்பட வேண்டும் என்றால், அவர் குறித்த இறுதி அறிக்கையை மத்திய அரசு தயார் செய்ய வேண்டும் என்றும், ஆகஸ்ட் 18-க்குள் நேதாஜியின் அஸ்தியை ஜப்பானின் ரெங்கோஜியில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக சந்திர குமார் போஸ் அளித்துள்ள பேட்டியில், “சுதந்திரத்திற்குப் பிறகு நேதாஜி இந்தியாவுக்குத் திரும்ப விரும்பினார். ஆனால், அவர் விமான விபத்தில் இறந்ததால் தாயகம் திரும்ப முடியாமல் போனது. நேதாஜியின் அஸ்தி ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருப்பது மிகவும் அவமானகரமான விஷயம்'' என்றார்.
மேலும், இந்திய விடுதலைக்காக போராடியவரை கவுரவிக்கும் வகையில், அவரது அஸ்தி இந்திய மண்ணைத் தொட வேண்டும் என்று கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரதமருக்கு கடிதம் எழுதி வருகிறோம். அவரது இறுதிச் சடங்குகளை இந்து முறைப்படி செய்ய வேண்டும்'' என்றும் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்தார்.
அத்துடன், தமது கடிதத்துக்கு அரசு பதில் அளிக்கும் என நினைப்பதாக கூறிய சந்திர குமார் போஸ், ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள அஸ்தி நேதாஜியுடையது அல்ல என்று அரசு நினைத்தால், அதனை அங்கு பராமரிக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக பிரதமரிடம் இருந்து பதில் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி யுபிஎஸ்சி கோச்சிங் சென்டர் சம்பவத்திற்கு யார் காரணம்? போலீசாரும், மாணவர்களும் கூறுவது என்ன?