புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு, குறிப்பிட் தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால், மே 5 ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஒன்றாக சேர்த்து லிசாரித்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்குகள் விசாரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை (ஜூலை 8) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தது. அத்துடன் இந்த வழக்கில் புதன்கிழமை (ஜூலை 10) கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிகுந்தனர்.
அதன்படி, மத்திய அரசு நேற்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ' நீட் தேர்வு முடிவுகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு சென்னை ஐஐடி ஆய்வு நடத்தியது. அதில் மறுதேர்வு நடத்தும் அளவுக்கு இதில் அசாதாரணமாக எதுவும் நிகழவில்லை என தெரிய வந்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜுலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வின் முன் இன்று (ஜுலை 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்துள்ள பதில்களின் நகல்கள், மனுதாரர்கள் சிலருக்கு கிடைக்கப் பெறவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் விளக்கத்துக்கு மனுதாரர்கள் பதிலளிக்க வசதியாக. வழக்கின் விசாரணை ஜுலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:விவாகரத்தான முஸ்லிம் பெண் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியும் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!