பெங்களூரு: கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் அஃப்தாப் அமீன் என்பவர் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி, புதிதாக குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வாங்கி அதில் துண்டு துண்டாக வெட்டிய உடலை சேமித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தினார்.
இதற்கிடையே, ஷ்ரத்தா வாக்கரின் தந்தை, தனது மகளைக் காணவில்லை என புகார் அளித்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனை அடுத்து, இந்த வழக்கில் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள வயலிக்காவல் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமாக அதிக துர்நாற்றம் வீதுவதாக, அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்பு.. கடந்து வந்த பாதை!
இதனை அடுத்து, வயலிக்காவல் பகுதிக்கு வருகை தந்த போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தபோது, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து, பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை குறித்த தகவலறிந்த கூடுதல் காவல் ஆணையர் சதீஷ்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியா இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வீட்டின் முதல் மாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சுமார் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம். மேலும், கொலை செய்யப்பட்ட பெண், பெங்களூரில் குடியேறியுள்ள வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர். விசாரணைக்கு பின்பு, இது குறித்த முழு விபரம் தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவம் போன்று, தற்போது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் நடைபெற்றுள்ள கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.