ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆன்மீக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் 'போலே பாபா' உரையாற்றினார்.
இவரின் உரையைக் கேட்க ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது, வெளியே செல்ல வழியின்றி கூட்ட நெரிசலில் சிக்கினர்.
Uttar Pradesh | Death toll in Hathras incident rises to 121 and 28 injured, as per the Office of the Relief Commissioner.
— ANI (@ANI) July 3, 2024
தப்பியோடிய போலே பாபா: இந்த நெரிசலில் சிக்கி நேற்று வரை குழந்தைகள், பெண்கள் என 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை)ம் பலி எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 28 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பலரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் கூறுகையில், "ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் தப்பி ஓடிய போலோ பாபா சாமியாரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் விதமாக, அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 105, 110, 126 (2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங் கூறுகையில்,"கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம். 'சத்சங்' முடிந்த பிறகு, போலோ பாபாவின் வாகனத்தைப் பின்தொடர்ந்து ஓடியுள்ளனர். இதன் காரணாமாக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டும், மூச்சுத்திணறியும் பெண்கள், குழந்தைகள் என பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் "என்றார்.
சிபிஐ விசாரணை? இந்த நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தக் கோரி, வழக்கறிஞர் கவுரவ் திவேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஆங்கரா ஏடிஜிபி மற்றும் அலிகார் கமிஷ்னர் தலைமையில் தனிப்படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தை அம்மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் ஆய்வு செய்து உள்ளனர்.
இரங்கல்: பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் ஆக விரும்புவது அபிலாசையா?, உயரிய நோக்கமா? - சர்ச்சையின் பின்னணி என்ன?