மும்பை: 71 வது உலக அழகிப் போட்டி கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதில், 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதன் இறுதிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்குத் தொடங்கியது. இந்த போட்டியை பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கரண் ஜோஹர் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மோகன் யங் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இதில் இந்தியா, அயர்லாந்து, இந்தோனேசியா, எஸ்டோனியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர். இதில், செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024ஆம் ஆண்டிற்கான 71வது உலக அழகி பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இவருக்கு கடந்தாண்டு உலகி அழகிப் பட்டம் வென்ற, போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா, கிறிஸ்டினாவுக்கு மகுடம் சூட்டி கௌரவித்தார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் இரண்டாம் இடம் பிடித்தர். பட்டம் வென்ற 24 வயதாகும் கிறிஸ்டினா பிஸ்கோவா மாடலாக இருந்து கொண்டே சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் பட்டம் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றம் தந்த சினி ஷெட்டி: 1996 ஆம் ஆண்டு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில். கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி 8 பேர் லிஸ்ட் வரை இந்தியாவின் சினி ஷெட்டி இருந்த நிலையில், முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறத் தவறினார். இவர் 2022 ஆம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவர்.
இதுவரை நடைபெற்ற 71 உலக அழகிப் போட்டிகளில் 6 முறை இந்தியா வென்றுள்ளது. அதன் விவரம் ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டயானா ஹெய்டன்(1997), யுக்தா முகி(1999), பிரியங்கா சோப்ரா(2000) மற்றும் மனுஷி சில்லார்(2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:“கண்ணான கண்ணே..” டிஸ்சார்ஜ் ஆகிய மறுகணமே மகனுக்காக மைதானத்தில் அஜித்குமார்!