மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவருமான மனோகர் ஜோஷி இன்று (பிப்.23) காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மனோகர் ஜோஷி இன்று அதிகாலை 3:00 மணியளவில் உயிரிழந்தார்.
பிப்.21ஆம் தேதி மாராடைப்பு காரணமாக ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1937ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நந்தவியில் கஜானன் கிருஷ்ண ஜோஷி மற்றும் சரஸ்வதி கஜனன் தம்பதியினரின் மகனாக பிறந்தவர், மனோகர் ஜோஷி. இவரது குடும்பம் மராத்தி பேசும் பிராமணக் குடும்பம் ஆகும்.
எம்ஏ சட்டப்படிப்பு முடித்துவிட்டு இவர் பிரகான் மும்பை மாநகராட்சியில் (BMC) அதிகாரியாக பணியாற்றினார். அதன்பின்னர், கோஹினூர் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் எலக்ட்ரீஷியன், பிளம்பர், டிவி, ரேடியோ, ஸ்கூட்டர் போன்ற பயிற்சிகளை, கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இக்கல்வி நிலையத்தின் கிளைகளை மும்பை, புனே, நாக்பூர், நாசிக் போன்ற இடங்களிலும் நிறுவினார். அதோடு, கட்டுமானம் மற்றும் அதன் மூலப்பொருட்கள் சார்ந்த வணிகத்திலும் இறங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவின் கண்டாலா பகுதியில் கோஹினூர் வணிக பள்ளி மற்றும் கோஹினூர்-ஐஎம்ஐ மேலாண்மை கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுவினார். இதன் பின்னர், தியானேஷ்வர் வித்யாபீடத்தின் அதிபராகவும் பொறுப்பேற்றார், மனோகர் ஜோஷி.
சிவசேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், அக்கட்சியின் மூலம் மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 முதல் 1989 வரை மூன்று முறை மும்பை மேயராகவும் பதவி வகித்தார். தொடர்ந்து, 1990-ல் சிவசேனா சார்பில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதோடு, 1995-ல் சிவசேனா-பாரதிய ஜனதா கட்சி (BJP) கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சராக உருவாகினார். 1999-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய மும்பை தொகுதியில் வெற்றிப் பெற்ற இவர் மக்களவை உறுப்பினரானார். இதுமட்டுமில்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA Alliance) ஆட்சியின் போது, 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராகவும் இவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூத்த சட்ட வல்லுநர் ஃபாலி எஸ் நாரிமன் காலமானார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!