டெல்லி: டெல்லி ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இன்று (மார்ச் 14) காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 9 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஷஹ்தரா மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேந்திர சவுத்ரி கூறியதாவது,"சாஸ்திரி நகர் தெரு எண் 13ல் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 5:22 மணியளவில் தீ பற்றி எரிந்து வருவதாக, தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்குக் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்.
நான்கு மாடிக் கட்டடத்தின் அடித்தளத்தில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருந்தது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கட்டடத்தில் சிக்கிய இருந்த ஒன்பது பேரையும் மீட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.இருப்பினும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் அவர்களின் உடல், உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இது குறித்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு அதிகாரி கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் நான்கு மாடிக் கட்டடத்தின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பிறகுதான் கட்டடத்தின் உள்ளே தீயானது பரவி உள்ளது. இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!