இம்பால் : மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. மணிப்பூரில் உள்ள இன்னர் இம்பாலில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் வாக்குச்சாவடிகள் சூறையாடல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், கலவரம் பாதித்த 11 வாக்குப்பதிவு மையங்களில் இன்று (ஏப்.22) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மொயரங்கம்பு, இபோபி, குரேய், க்ஷேத்ரிகாவ், தோங்ஜு, யூரிபோக் மற்றும் கோந்தௌஜம் ஆகிய பகுதிகளில் உள்ள 11 வாக்குப்பதிவு மையங்களில் இன்று காலை (ஏப்.22) முதலே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாலை 3 மணி நிலவரப்படி 73.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவுட்டர் மணிப்பூரில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு முதல் வெற்றி! சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு! எப்படி நடந்தது? - Lok Sabha Election 2024