பெங்களூரு : கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதியில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று (ஏப்.8) முதலமைச்சர் சித்தராமையா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, திறந்தவெளி வாகனத்தில் வந்த சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு கீழே இருந்த தொண்டர்கள் மாலைகளை வழங்கினர். அவற்றை வாகனத்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் வாங்கி, முதலமைச்சர் சித்தராமையா அருகில் இருந்த வேட்பாளர், தலைவர்களுக்கு அணிவித்தார்.
இந்நிலையில் மாலையை பெற்று அணிவித்த நபர் தனது இடுப்பில் துப்பாக்கி வைத்து இருந்தார். துப்பாக்கியை வெளிப்படையாக வைத்துக் கொண்டே காங்கிரஸ் தலைவர்களுக்கு அந்த நபர் மாலை அணிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில், அந்த நபரின் பெயர் ரியாஸ் என்பதும், முன்னர் பல்வேறு சம்பவங்களில் இவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறை அனுமதியின் பேரில் பாதுகாப்புக்காக சொந்தமாக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி பெற்று இருப்பதும் தெரியவந்து உள்ளது.
பிடிக்கப்பட்ட ரியாஸ் தொடர்ந்து போலீசாரின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாநில பாஜகவினர், முதலமைச்சர் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்த நபர்கள் ரவுடிகள் என்பதை காட்டுகிறது என விமர்சித்து உள்ளனர்.
இதையும் படிங்க : உத்தரகாண்ட் குருத்வாரா தலைவர் துப்பாக்கிச் சூடு: ரவுடி என்கவுன்டரில் கொலை! - Gurdwara Leader Murder Case