சண்டிகர் : அரியானாவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியின் போது ஹனுமான் வேடமணிந்த நடிகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (ஜன. 22) நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக அரியானா மாநிலம் பிவானி, ஜெயின் சவுக் பகுதியில் உள்ள ராமர் கோயிலில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹனுமான் வேடமிட்ட ஹரிஷ் குமார் என்பவர் ராமரின் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். பலரும் அவர் காட்சியில் நடிப்பதாக நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மயக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளாததால் சந்தேகம் அடைந்த சக நடிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவர் அருகே சென்று பார்த்த போது, அவர் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அவர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ராமர் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு!