புதுடெல்லி/கிரேட்டர் நொய்டா: உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணத்துக்குப் பின்னர் மகளை, மருமகனுடன் புகுந்த வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலவழித்து ஹெலிகாப்டர் மூலம் பாச மிக்க தந்தை அனுப்பி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்துக்குப் பின்னர் மகளை புகுந்த வீட்டுக்கு மருமகனுடன் வழி அனுப்பி வைப்பது என்பது ஒவ்வொரு தந்தைக்கும் பாசத்தோடு கூடிய வலிமிகுந்த செயலாகும். மகளை முதன் முறையாக புகுந்த வீட்டுக்கு வழி அனுப்பும் இப்படியான நிகழ்வு ஒவ்வொரு தந்தைக்கும் மறக்க முடியாத நிகழ்வாகும். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வை, அந்த கிராமத்தினரே என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நடத்தி இருக்கிறார்.
மைதானம் ஒன்றில் கிராமத்தினர் குழுமி இருக்க, 27 போலீசார் பாதுகாப்புக்கு நிற்க, ஹெலிகாப்டர் ஒன்று பெரும் சத்தத்துடன் தூசியை கிளப்பியபடி தரையிறங்குகிறது. மணமகன், மணமகள் உளிட்டோருடன், அவர்களின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரை நோக்கிச் செல்கின்றனர். கிரேட்டர் நெய்டாவில் உள்ள ரபுபுரா பகுதியில் உள்ள புலந்த்ஷாஹர் முதல் ருஸ்தம்பூர் வரை இரண்டு கிராமங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் மூலம் மணமக்கள் ஊர்வலம் நடைபெற்றது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் மகாயுதி அபாரம்..! மகா வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி..!
ரபுரா பகுதியில் இருக்கும் ருஸ்தம்பூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சிங் என்பவர் தமது மகளை ஹெலிகாப்டர் மூலம் மருமகனுடன் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மணமகளின் சொந்த ஊருக்கும், அவரது கணவரின் ஊருக்கும் இடையே 14 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. இந்த 14 கி.மீ தூரத்தை ஹெலிகாப்டர் மூலம் கடப்பதற்கு ஹெலிகாப்டருக்கு ரூ.8 லட்சத்தை மணமகளின் தந்தை செலவழித்திருக்கிறார்.
சுபாஷ் சிங் மகள் அஞ்சலி ராஜ்புத் என்பவருக்கும் மணமகன் அமானுக்கும் இடையே கடந்த 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில் மணமகளும், மணமகனும் ஹெலிகாப்டர் மூலம் மணமகன் வீட்டுக்கு சென்றனர். இதனைக் காண அந்த பகுதியில் உள்ள கிராமத்தினர் குழுமி இருந்தனர். இந்த நிகழ்வுக்காக மணமகளின் தந்தை போலீஸ் பாதுகாப்பு கோரியிருந்தார். இதையடுத்து உதவி காவல் ஆணையர் தலைமையில் 27 போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். 14 கி.மீ தூரத்தில் உள்ள புகுந்த வீட்டுக்கு செல்வதற்காக மகளுக்காக ரூ.8 லட்சம் செலவழித்த தந்தையை அந்த கிராமமே வியப்புடன் பார்த்தது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.