மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 45 பேர் கொண்ட இப்பட்டியலில், தமது நெருங்கிய உறவினரும், மாநில துணை முதல்வருமான அஜித் பவாரை எதிர்த்து பாராமதி தொகுதியில் களமிறங்குகிறார் யோகேந்திர பவார். 32 வயதான இவர் அஜித் பவாரின் இளைய சகோதரரான சீனிவாஸ் பவாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அஜித் பவாரின் மனைவியான சுனித்ரா பவார் பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத்பாவார் அணி) தலைவரும், நெருங்கிய உறவினருமான சுப்ரியா சுலேவிடம் சுனித்ரா பவார் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யோகேந்திர பவாரை தவிர, கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் இஸ்லாம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டீலின் மகன் ரோஹித் பாட்டீல் முதல்முறையாக தேர்தலில் களம் காண்கிறார். தாஸ்கான்-கவ்தேமஹங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.