பாட்னா : சட்டவிரோதமாக ஆயுதம் வாங்கிய வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு நிரந்தர கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 27 ஆண்டுகள் பழைய வழக்கில் மத்திய பிரதேச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கி உள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்த ஆயுத வியாபாரி பர்வேஷ் குமார் சத்துருவேதி, இந்திரகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், உத்தர பிரதேசம் மாநிலம் மெஹோபா பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் சர்மா சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபடுவதாக கூறி இருந்தார்.
குவாலியரில் உள்ள நிறுவனத்திடம் ஆயுதங்கள், வெடி பொருள்களை வாங்கி பீகாரில் ராஜ்குமார் சர்மா சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் முன்னாள் பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாத் உள்பட 23 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள நீதிமன்றம், முன்னாள் பீகார் முதலமைச்சர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு நிரந்தர கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
லாலு பிரசாத் யாதவிடம் நிரந்தர கைது வாரண்டை வழங்க குவாலியர் போலீசார் பீகார் தலைநகர் பாட்னா விரைந்து உள்ளனர். ஒருவருக்கு எதிராக நிரந்தர கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், அவரை கைது செய்யும் போது கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க சீனா, வடகொரியா திட்டம்" - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை! - Lok Sabha Election 2024