உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 36 கைதிகளுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, லக்னோ சிறையில் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில், உத்தர பிரதேச மாநில சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட சுகாதார சோதனையில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உத்தரவின் பேரில் கைதிகளின் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக லக்னோ சிறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்தார். ஏற்கனவே எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 லக்னோ சிறை கைதிகள், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கைதிகளின் சிகிச்சைக்கு உதவும் வகையில் சிறை நிர்வாகம் ஆலோசனை வழங்கத் தொடங்கி உள்ளது.
மேலும் உணவு முறை மாற்றங்களுக்கும் அனுமதி அளித்து, பாதிக்கப்பட்ட கைதிகளுக்காக உணவு முறை மேம்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, கே.ஜி.எம்.யூ-வின் ஆன்டி ரெட்ரோ வைரஸ் தெரபி (ART - Anti Retroviral Therapy) மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கான்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!